November 12, 2009

ரூம்மேட்

நான்கு மாதங்களுக்குப் பிறகு என் நண்பனைச் சந்திக்கச் செல்கிறேன், அவனுக்குப் பிடித்த புரூட் அல்வா,முந்திரி பக்கோடா, நேந்திர பழ சிப்ஸ், சீட்லெஸ் திராட்சை என பார்த்துப் பார்த்து பாரிஸ்கார்னரில் வாங்கிக் கொண்டு.

ஆனந்தன், ஆம் உண்மையாகவே என் வாழ்க்கையில் ஆனந்தத்தைக் கொண்டுவந்தவன்.

மனைவி அமைவது மட்டுமல்ல, ரூம் மேட் அமைவதும் கூட என்னைப் பொறுத்தவரையில் இறைவன் கொடுக்கும் வரம்தான்.

முதன் முதலில் நான் ரூம்மேட் என்னும் ஜாதியைச் சந்தித்தது கல்லூரி விடுதியில். ரூம் மேட்கள்.அதில் இருவர் அவர்களுக்குள் நல்ல நட்பாகிக் கொண்டார்கள். இன்னொருவனுக்கு அருகாமை ரூமில் இருந்தவனுடன் கெமிஸ்டிரி. நானும் முடிந்தவரை என் நட்புக்கரத்தை நீட்டிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் ரூம் மேட் வேறு, நண்பன் வேறு என்ற கருத்தில் இருந்தார்கள். வெறுப்புற்ற நான் எனக்கேற்ற நண்பனைத் தேடும் முயற்சியில் இறங்கினேன். தோல்வி.

இந்நிலையில் அருகாமை திரையரங்கில் வாலி படம் வெளியானது. படத்தின் சிம்ரன் அறிமுக காட்சியில் காட்டப்பட்ட பின்புறமும், அஹாஹா பாடலில் தீயின் அருகில் ஆடும் ஆட்டமும் என்னை ஏதோ செய்தன.

அன்று இரவு நல்ல தூக்கம். பின் காலை ஐந்து மணி அளவில் என் கைலி ஈரமானதைப் போல் ஒரு உணர்வு. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். ஆம். அது நடந்திருந்தது. இதற்கு முன்னால் ஒரு முறையும் நடந்திருக்கிறது. ஆனால் அது அனிச்சையாக. இது சிம்ரனை நினைத்து. உடல் முழுவதும் ஒரு மெல்லிய படபடப்பு ஓடியது. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. லேசான குற்ற உணர்வு தலை தூக்கியது. காலை நேரத்திலும் வேர்ப்பது போல் உடலில் ஒரு புழுக்கம். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு இனம் புரியாத பரவசம் மனதை ஆக்ரமித்தது.

பின் அந்த பரவசத்திற்க்கு மனம் அடிக்கடி ஆசைப்பட ஆரம்பித்தது. ரம்பா, மும்தாஜ், மாளவிகா, மந்திரா என பார்க்கும் படத்திற்க்கு ஏற்ப ஹீரோயின்கள்களும் மாறத் தொடங்கினார்கள். உடன் ஆடும் கதாநாயகனை வெட்டிவிட்டு அந்த இடத்தில் நான் ஆடத் தொடங்கினேன். அதுவாக நிகழ்ந்தால் பரவாயில்லை. நாமாகச் செய்யவேண்டுமென்றால் அதற்கு இடம்,காலம் தேவைப்படுகிறது. ரூமில் காலையில் எனக்கு முன்னால் ஒருவன் எழுந்து கந்த சஷ்டி கவசத்தை டேப்பில் போட்டு விடுவான். மாலை வேளைகளும் உசிதப் படவில்லை. அறையைத் தாழிட்டுக்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள். இன்னொரு ரூம் மேட் ராக்கோழி.

கழிவறை மட்டுமே ஒரே புகழிடமாக இருந்தது. அந்த பரவசத்தை அனுபவிக்கும் இடமா அது?. நீண்ட யோசனைக்குப் பின் குளியலறையை தேர்ந்தெடுத்தேன். மாலை வேளைகளில் துவைக்க, குளிக்கப் போவது போல் சென்று பரவசத்தை அனுபவிக்கத்
தொடங்கினேன். சுவரே என் மனம் கவர்ந்த பெண்ணானது. ஒரு முறை உணர்ச்சி வேகத்தில் முத்தம் கொடுத்து, அதில் இருந்த ஆயிரக்கணக்கான கிருமிகளுக்கு என் தொண்டையில் அடைக்கலம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக படிப்பை முடித்து, வீடு திரும்பினேன். அங்கே அறைகள் குறைவு. மனிதர்கள் அதிகம். தாங்க முடியாமல் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்தேன். சுமாரான வாடகையில் ஒரு அறையைப் பிடித்தேன். அங்கு அமைந்த ரூம்மேட்டும் ரூம்மேட் வேறு, நண்பன் வேறு கொள்கைக்காரர். ஆனால் ஒரு விசேஷம், அவர் நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர். இரவுகள் இனிமையாகத் தொடங்கின. ஒரே பிரச்சினை கைலிகளை துவைப்பதுதான். தண்ணீர் கஷ்டம் வேறு. ரூம்மேட்டின் இன்னொரு விசேஷம், அவர் ஹிந்து செய்தித்தாள் வாங்குவது. தினத்தந்தி,தினகரன் ஆகியவை வேலைக்கு ஆகாது. கிழிந்து விடும் வாய்ப்பு அதிகம். தினமலர்,தினமணி ஓகே. ஆனால் ஹிந்து எதையும் தாங்குவது. 24 பக்கம். நான்கு பக்கத்தை உருவினாலும் தெரியாது. வெள்ளி,ஞாயிறுகளில் அதிக பக்கங்கள் வேறு. எனவே ஹிந்து பேப்பர் வடிகாலானது. வேலை முடிந்தவுடன் மடித்து பெட்டுக்கு அடியில் வைத்து விடவேண்டியது. சமயம் கிடைக்கும்போது டிஸ்போஸ்.

அவர் சில மாதங்களில் வேறு அறைக்குச் சென்றுவிட, அதே கொள்கையுடைய இன்னொருவன் ரூம்மேட்டானான். கம்ப்யூட்டர், பைக், செல்போன் என நல்ல வசதியானவன். ஒரு காலுக்கு மூன்று ரூபாய் செலவழித்து ஊரில் உள்ளோரிடமெல்லாம் பேசுபவன் என்னிடம் ஒரு புன்னகையைக் கூட உதிர்த்ததில்லை. அவன் இரவுகளில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்க இரவுகள் பாலையானது எனக்கு. வேறு வழியில்லாமல் ஒரு தனி ரூம் கேட்டுப் போய்விட்டேன். ஹிந்து பேப்பரும் வாங்கத் தொடங்கினேன்.

அந்தக் காலம் ஒரு பொற்காலம் எனலாம். புதிது புதிதாக நடிகைகள் மட்டுமல்ல, கெயிட்டி போன்ற தியேட்டர்களின் புண்ணியத்தில் பிரதிபா,ரேஷ்மா,சிந்து போன்ற தேவதைகளும் அறிமுகமானார்கள். அவர்கள் சலித்தபோது அலுவலக ரிஷப்சனிஸ்ட், பாஸ் பி ஏ, பேருந்தில் வழக்கமாக ஏறும் ஒரு கவர்ச்சி ஆண்ட்டி, ஊருக்குச் செல்லும் போது வேறு வழியில்லாமல் பார்க்கும் சீரியல்களில் வரும் பெண்கள் என யாரையும் விட்டு வைக்க வில்லை. அவர்களின் மீதான எண்னங்களின் விளைவுகள் ஹிந்துவில் படிந்தது. ஏன் அறை இருந்த தெருவில் இருந்த சுமாரான எஸ் டி டி பூத் பெண்ணைக்கூட விட்டு வைக்கவில்லை.

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவனுக்கு கல்யாணம், இவனுக்கு கல்யாணம் என்ற செய்திகள் அடிபடத் தொடங்கின. என் வீட்டில் என் டர்ன் வர நாளாகும் போல் தெரிந்தது. பணம் சேர்ப்பது அவசியம் என்று அப்போதுதான் தோன்ற ஆரம்பித்தது. மேலும் திருமணத்துக்குப் பின் மனைவியுடனும் இதுபோல் தான் ஈடு பட்டு விடுவேனோ என்று பயம் தோன்றத் தொடங்கியது. அந்த பரஸ்பர பரிமாறல்தான் உச்சம். அந்த நேரத்தில் உணர்ச்சி இல்லாமல் இயந்திரமாக மாறிவிட்டால் என்ன செய்வது? என மனம் கவலைப்பட தொடங்கியது.

முதல் வேலையாக தனி ரூமை காலி செய்தேன். இருவர் இருக்கும் ரூம் அருகிலேயே கிடைதத்து. அந்த ரூமுக்குள் நுழைந்தபோது ஒரு சினேகப் புன்ன்கையுடன் வரவேற்றவன் தான் ஆனந்தன். இதற்கு முன்னால் நான் ஒரு ரூமுக்குள் நுழையும் போதெல்லாம் அங்கே இருப்பவர்கள் பர்வை என்னை எடை போடும் விதத்திலேயேதான் இருந்திருக்கிறது. முதல் புன்னகை இவன் அருளியதுதான். ரூம் முழுக்க சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன்,காலச்சுவடு என புத்தகங்கள். நம்மதுதான். யூஸ் பண்ணிக்குங்க என்றான் சினேகத்துடன்.

அலுவலகம் முடிந்து முன்னால் வந்து விட்டால் கூட, நான் வரும் வரை சாப்பிட போகாமல் இருப்பான். என் வீட்டார் கூட எனக்காக காத்திருந்ததிலை எனும் போது அவன் இன்னும் நெருக்கமானான். உணவுக்குப் பின் ஆளுக்கொரு புத்தகததைப் பிரித்து படித்துக் கொண்டிருபோம். இரண்டு வாரம் கழித்து, ஒரு ஞாயிறு, காலையில் எழுப்பி என்னை கன்னிமாரா நூல் நிலையத்துக்கு அழைத்தான். அவன் ஞாயிறு அங்கு செல்வது வழக்கம் என்றும், இரண்டு வாரங்களாக வேலையின் காரணமாகச் செல்லவில்லை என்றும் சொல்லி அழைத்தான்.

நூலகத்துக்குச் சென்று படிக்க ஆரம்பித்தோம். பசியெடுக்கும்போது மாண்டியத் ரோட்டுக்கு சென்று பிரட் ஆம்லேட்டும்,தர்பூஸ் ஜூசும் சாப்பிடுவது, பின் படிப்பது என மாலை வரை கழிந்தது. பின் பீச். அவன் எனக்கு ஒரு புது உலகத்தையே காட்டினான். அதுவரை நான் உலகின் மீது வைத்திருந்த மதிப்பீடுகள் எல்லாம் படித்த புத்தகங்களின் வழியாக மாறத் தொடங்கின. பெண்களை நினைத்து சுயமைதுனம் செய்வது அவர்களுக்குச் செய்யும் அநீதியா? ஆணுக்கும் கற்பு வேண்டும் என்று சொல்கிறார்களே? நாம் அதை மீறுகிறோமா?இப்படி ஒரு பெண்ணை நினைத்து பரவசம் காண்பது அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்? என பல கேள்விகள் எழுந்தன.

போனது போகட்டும். இப்போதுதான் அப்படியில்லையே, என சமாதானப் படுத்திக் கொண்டேன். மாதங்கள் கடந்தன. நட்பு இறுகியது. அவன் தீபாவளிக்கு ஊருக்குப் போவதற்க்காக நான் இரவு பன்னிரென்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் ரிஸர்வேஷன் கியூவில் நின்றேன். அங்கு வந்த பழைய அறை நண்பனொருவன், நீதான் விழுப்புரமாச்சேடா, பஸ்ல போகலாமில்ல? என்று கேட்டதற்கு, என் நண்பனுக்காக என நெஞ்சை நிமிர்த்தி கர்வமாய்ச் சொன்னேன்.

ஆனந்தனுக்கு திருமணம் நிச்சயமானது. வீடு, கேஸ், புது பாங்க் அக்கவுண்ட் என நான், அவன் சொல்லாமலேயே அலைந்தேன். நண்பர்களுக்கு கொடுப்பதற்காக அடிக்கும் பத்திரிக்கையை நானே அடித்தேன். திருமணம் முடிந்தது. முதல் ஒரு மாதம் தொல்லை கொடுக்க வேண்டாமென்று விலகியே இருந்தேன். பின்னர் அடுத்தடுத்த மாதங்களில் விடுமுறை நாட்களில் தொலை பேசும் போதெல்லாம் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்துக்குச் செல்வதாக பதிலளித்தான். மூன்று மாதங்களில் வெறுமையை நான் உணரத் தொடங்கியிருந்தேன்.

இதற்கு முன்னர் அமைந்த ரூம்மேட்கள் எல்லாம் என்னைவிட கல்வியில்,அறிவில், கூறில் சிறந்தவர்கள். ஆனால் என்னை அவர்கள் நண்பனாக ஏற்றுக் கொண்டதில்லை. ஏன் சில விஷயங்களைக் கூட எனக்கு கடத்தியத்தில்லை. ஆனந்தன் என்னை உயர்த்தியவன். இப்பொது அப்படி நான் யாருக்காவது ஆனந்தனாக இருக்க முயற்சித்தேன். என்னிடம் அந்த அளவு ஆளுமை இல்லையோ என சந்தேகம் வரும்படி, என்னால் அது முடியவில்லை. ஞாயிறுகள் என்னை பயமுறுத்தின.

ஒருவழியாக ஆனந்தன் என்னை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டான். இதோ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். கல்யாண கூட்டத்தில் சரியாக கூட அவன் மனைவியிடம் அறிமுகமாகவில்லை. இப்போது எப்படி அறிமுகப் படுத்தப் போகிறான்?, எப்படி சந்தோஷமடைவான் என நினைத்துக் கொண்டே காலிங் பெல்லை அழுத்தினேன். வாப்பா என்று வரவேற்றவன், தன் மனைவியிடம் என் பிரண்டு என்றான் மொட்டையாக. ஏதோ உதிர்வது போல் இருந்தது. அவன் மனைவி அசுவராசியமாக உம் கொட்டினார். காபி கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார்.

அப்புறம் என ஆரம்பித்தான். இன்னைக்கு பிக்சர் போலாம்னு இருக்கோம் என்றான். காபி சாப்பிட்டு விட்டு விடைபெற்றேன். வரும் வழியில் ஒரு கடையில் ஹிந்து பேப்பர் வாங்கினேன்.ஆனந்தன் மனைவியின் முகம் மனதில் நிழலாடியது.

November 11, 2009

சட்டை

அரவிந்த் என் அறை நண்பன்.சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். அவனுக்கு, அவன் கம்பெனிகளின் கிளைகள் எங்கெங்கே இருக்கின்றன, எந்த பொருளுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதெல்லாம் கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம். ஆனால் அலன் சாலி, லூயி பிலிப், குரொக்கடைல், பேசிக் ஷோ ரூம்கள் எல்லாம் எங்கெங்கு இருக்கின்றன, அங்கே எவ்வளவு ஆபர், செகண்ட் சேல்ஸ் எப்போது என்ற தகவல்கள் எல்லாம்
விரல் நுனியில் இருக்கும். நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பித் தள்ளுவான்.

அவன் முதன் முதலில் அறை நண்பனாக உள்ளே நுழைந்த உடனேயே என் செல்போனைத் தான் கவனித்தான்.என்ன பாஸு போயும் போயும் டபுள் ஒன் டபுள் ஜீரோவா, என அதை எடுத்துப் பார்த்தவன், சிம் கார்ட் பி எஸ் என் எல் என்றதும் தலையில் அடித்துக் கொண்டான். நீங்க எங்கெங்கே பேசுவீங்க, அந்த நம்பர்லாம் என்ன, ஒரு நாளைக்கு எவ்வளவு மெசேஜ் அனுப்புவீங்க? என்று கேள்விகளாய் கேட்டு கடைசியில்
இந்த சிம் வாங்குங்க, செல்ல நாளைக்கு மாத்திடுங்க என்று முடித்தான்.

ஆம் அரவிந்த் அப்படித்தான். தகவல் களஞ்சியம். தேர்ந்தெடுப்பு ரசனை அதிகம்.மேலும் நாட்டாமை மாதிரி பாரபட்சம் இல்லாமல் யாருடனும் ஒரே அளவிலான நட்பு பாராட்டுவான். அவனைத்தேடி வாரம் இரண்டு பேராவது வருவார்கள்.

“மாப்பிள்ளை, அண்ணன் கல்யாணம், துணி எடுக்கணும்”,
“இவன் என் பிரண்டு, அடுத்த மாசம் கல்யாணம், துணி எடுக்கணும்”

கூட வாடா

என கோரிக்கைகளோடு வருவார்கள். இவனும் சலிக்காமல் நிறைவேற்றுவான்.

ஆனால் அவன் துணி எடுக்க கூட வராத நண்பன் நான் மட்டும்தான்.

”போதும்டா, நான் கிழிக்கிற கிழிக்கு” என்று மறுத்து விடுவேன்.

அவன் யுனிகார்னை சர்வீஸுக்கு விட்டிருந்த நாளில் என்னுடைய ஸ்பிளெண்டரை எடுத்துக் கொண்டு போனவன், திரும்பி வந்து காய்ச்சினான்.

என்னடா இது, வண்டி இப்படி வச்சிருக்க என்றவன்,அவனின் ஆஸ்தான மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றான். அவர் கொடுத்த லிஸ்டுடன் கிளம்பினோம். ஸ்பேர்பார்ட்ஸ் கடை ஒரு மார்வாரிக்கு சொந்தமானது. அவர் கட்டமும் இல்லாமல் கோடும் இல்லாமல் ஒரு டிசைனில் சாயம் போன கலரில் சட்டை போடிருந்தார். இவனுக்கு மயிர்க்கால்கள் சிலிர்த்தன.

இந்த மாதிரி ஒரு டிசைன்ல தாண்டா சட்டை போடணும். எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ்ல இந்த டிசைன் ரேர்டா என்றான். அவரிடமே, ”எங்கே எடுத்தது” எனக் கேட்க

”ரொம்ப நாளாச்சு மறந்துட்டேன்” என்றார்.

எனக்கென்னவோ அது மரண மொக்கை டிசைனாக தெரிந்தது.

ஆனால் அவனோ,

“ அந்த கலர் தாண்டா சரியில்லை. சிகப்புக்கும் மெஜண்டா வுக்கும் இடையில ஒரு கலர் இருக்குமே, அந்த கலர்ல இந்த டிசைன்ல சட்டை போட்டா, அப்படியே அள்ளும்” என்றான்.

அன்றிலிருந்து அவன் தேடல் ஆரம்பித்தது. மார்வாடி என்பதால் சௌகார்பேட்டை பக்கம் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு என்று அந்த ஏரியாவை அலசினான். எனக்கு மாலை வேளைகளில் கொறிப்பதற்கு பல குஜராத்திய இனிப்பு வகைகள் கிடைத்தன. தமன்னாவின் உறவுப் பெண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைதத்து. ஜெயின் கோவிலில், என் திருமணத்திற்காக ஒரு பிரார்த்தனை செய்ய முடிந்தது.

ஆனால் சட்டை தான் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன் நண்பன் திருமணத்திற்கு துணி எடுக்க துணைக்குப் போனவன் ஆலா பிளீச் போட்ட அங்க வஸ்திரம் போல பளிச் புன்னகையுடன் வந்தான்.

வேறொன்றுமில்லை. தன் தந்தையின் பிறந்த நாளுக்கு துணி எடுத்துக் கொடுத்து அவரை அசத்த நினைத்த ஆரணங்கு ஒன்று ஆடை செலக்ட் செய்யத்தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்த ஷோ ரூமில். இவன் உடைகளுக்கு அடித்துக் கொண்டிருந்த கமெண்டுகளைக் கேட்டு இவனிடம் அபயம் புகுந்தது. இவனும் அவளிடம் அவர் நிறம்,உயரம்,குண்டா,ஒல்லியா, தொப்பையா, வழுக்கையா,
சுருள் முடியா, கண்ணாடி போட்டிருப்பாரா என மச்சத்தை தவிர எல்லா விபரத்தையும் கேட்டு ஒரு செட் எடுத்துக் கொடுத்திருக்கிறான். இலவச இணைப்பாக தன் நம்பரையும் கொடுத்திருக்கிறான்.

இரண்டு நாளில் அவளிடமிருந்து போன். அவள் தந்தை உடையைப் போட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். காதல் கண்ணீரில் தான் முடியக் கூடாது. ஆரம்பிக்கலாம். அதுவும் ஆனந்தக் கண்ணீரில்.தப்பில்லை.

துணைவி சிக்கியும் துணி சிக்கவில்லை அவனுக்கு. ஒரு முறை மும்பை போன போது கூட அந்த சட்டையை தேடி சலித்து வந்தான்.

இரண்டு வாரம் கழித்து அவள் பிறந்த நாள் வருகிறது, என பரிசுப் பொருள் தேடி சேகரிக்க ஆரம்பித்தான். எங்கள் அறையே கிப்ட் ஷாப்பாக மாறிக் கொண்டிருந்தது.

பிறந்த நாளுக்கு இரு நாள் முன்னால் அதே ஆலா பிளீச் சிரிப்புடன் வந்தான். என்னடா புரமோஷனா? என்றேன். இல்லடா சட்ட சிக்கிடுச்சு என்றான். அவ பிறந்த நாளுக்குத்தான் போடனும்னு இருந்திருக்கு என்றான்.

நாளைக்கு செங்கல்பட்டு ஏரியா. முடிஞ்சு சாயங்காலம் வந்ததும் பேசியல், அப்படியே தூங்கிட்டு பிரெஷா இந்த சட்டையைப் போட்டுக்கிட்டு போனா ”என் ராஜகுமாரனே” அப்படீம்பா என்று லயித்தான்.

மாலை அலுவலத்திலிருந்து லேட்டாகத்தான் திரும்ப முடிந்தது. அரவிந்த் இருண்டு போன முகத்தோடு உட்கார்ந்திருந்தான். அந்த சட்டை கசக்கி வீசப்பட்டிருந்தது.

என்னடா ஆச்சு? என்றவுடன் புலம்பினான்.

இந்த சட்டையை அங்க ஒரு ஸ்கூல்ல யூனிபார்மா வச்சிருக்காங்கடா.

November 08, 2009

தமிழ்சினிமாவில் பெண்ணியம் பகுதி-2

எண்ணிக்கையளவில் நடுத்தர குடும்பத்து பெண்களின் பிரச்சினைகளை தமிழ்சினிமாவில் அதிகம் பேசியவர் பாலசந்தர் தான்.

நடுத்தர வர்க்க பொருளாதார பிரச்சினைகள் (நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ),

சமூகப் பிரச்சினைகள் (வறுமையின் நிறம் சிகப்பு, தப்புத் தாளங்கள்,தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை
அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை)

காதல் (மரோ சரித்ரா, சொலத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும்,புன்னகை மன்னன்,அழகன், டூயட்..),

நகைச்சுவை (பாமா விஜயம்,அனுபவி ராஜா அனுபவி, தில்லு முல்லு,பொய்க்கால் குதிரை),

ரொமாண்டிக் வகையில் நான் அவன் இல்லை, மன்மத லீலை, மனித உறவுகளின் தீவிர குழப்பத்தில் அபூரவ ராகங்கள், மூன்று முடிச்சு என அவர் கை வைக்காத துறைகள் இல்லை.

நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போவது அவர் பெண்ணியத்தை கையாண்ட விதம் மட்டுமே. அதற்கு நாம் எடுத்துக் கொள்ளப்போவது அவர் பெண்ணியத்தை அடிப்படையாக வைத்து எடுத்த படங்களை மட்டுமே.

1. இரு கோடுகள்
2.தாமரை நெஞ்சம்
3.அரங்கேற்றம்
4.அவள் ஒரு தொடர்கதை
5. அவர்கள்
6. நிழல் நிஜமாகிறது
7. 47 நாட்கள்
8.கல்யாண அகதிகள்
9. அக்னி சாட்சி
10. சிந்து பைரவி
11. மனதில் உறுதி வேண்டும்
12. புதுப் புது அர்த்தங்கள்
13. ஒரு வீடு இரு வாசல்
14. கல்கி
15. பார்த்தாலே பரவசம்.

இரு கோடுகள் படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி காதலிக்கிறார்கள். காசியில்
திருமணம் செய்கிறார்கள்.ஜெமினி வீட்டார் நிர்ப்பந்தம் காரணமாக அவர் சென்னை வருகிறார். அங்கே ஜெயந்தியை திருமணம் செய்கிறார். கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். சௌகார் ஐ ஏ எஸ் தேர்வு பெற்று அந்த அலுவலகத்திற்கே கலெக்டராக வருகிறார். வந்து ஜெமினியுடன் வாழ வேண்டுமென பிரயத்தனப் படுகிறார், புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் எனக்கே என்று கொலுவில் பாடு மளவுக்கு. இது அப்பட்டமான ஆணாதிக்கப் பிரதி. கலெக்டரே ஆனாலும் அவள் தாலிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது மாதிரியான செய்தியே பெண்களைச் சென்றடைந்தது.

சிந்து பைரவியில் பாடகர் சிவகுமாருக்கு தன் மனைவி சுலக்‌ஷனாவுக்கு இசை பற்றி தெரியவில்லை என வருத்தம். இசையைப் பற்றி பகிர சுஹாசினி வருகிறார்.படுக்கையையும் பகிர்கிறார். சுலக்‌ஷனாவுக்கு இது பற்றி தெரிய வந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்ய வைக்க முனைகிறார். சுஹாசினியோ தனக்குப் பிறந்த குழந்தையை பரிசாக கொடுத்து விட்டுப் போகிறார். இதில் ஒரு கிளைக்கதை, சுஹாசினியின் ஒரிஜினல் பெற்றோர், சிவகுமாருக்கு நண்பர்கள். திருமணத்துக்கு முன் உறவின் காரணமாகப் பிறந்தவர்
சுஹாசினி. அதனால் அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுகிறார் சுஹாசினியின் தாய். உண்மை தெரிந்தும் குடும்ப அமைதி கெடும் என குடும்பத்தில் சேர்க்க மறுக்கிறார் சுஹாசினியின் தாய்.

இந்தப் படம் சொல்ல வருவது என்ன? ஒரு ஆண் தனக்கு தேவையென்றால் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்ளலாம். அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்.சரி பெண் இப்படிச் செய்யலாமா? தன் ரசனைக்கு ஏற்ப?

கணவருக்கே குழந்தையைப் பெற்றிருந்தாலும் குடும்ப அமைதி கெடாமல் இருக்க அவளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இந்த செய்திகள் தான் மக்களைச் சென்றடைந்தன இந்தப் படத்தில்.

புதுப் புது அர்த்தங்கள்

பாடகன் (ரகுமான்)மீது ஆசைப் படுகிறாள் பணக்காரப் பெண்(கீதா). ஓவர் பொசஷிவ் காரணமாக சந்தேகப் படுகிறாள். அவன் ஓடி விடுகிறான். அங்கே கணவனால் பாதிக்கப் பட்ட பெண்ணுடன் (சித்தாரா)காதல். இங்கே பணக்காரப் பெண்ணுக்கு இன்னொரு கிரிக்கெட் வீரனுடன் மணம் முடிக்க ஏற்பாடு ஆகிறது. கிரிக்கெட் வீரனுக்கும், கீதா வீட்டு பணிப் பெண்ணுக்கும் காதல். திருமண செய்தி கேட்டு அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கீதாவுக்கு பைத்தியம் பிடிக்கிறது. கணவனை கொடுமைப் படுத்தியது தவறு என மனச் சிதைவு கொள்கிறாள். அங்கே சித்தாராவின் கணவன் விபத்தில் சிக்கி கலை இழக்கிறான். இயக்குநர் படத்தில் வரும் மற்ற பாத்திரங்களை பேச விட்டு ரகுமான் - சித்தாரா ஜோடிக்கான முடிவவைச் சொல்கிறார். கல்யாணம் புனிதமானது. அவங்க அவங்க வீட்டுக்கு சமத்தா திரும்பிப் போங்க என்று.

சரி. இதில் ரகுமான் கேசைக் கூட விட்டு விடலாம். தன்னை விபச்சார விடுதி அளவுக்கு தள்ளிய கணவனுக்கு ஏன் சித்தாரா சேவை செய்யப் போக வேண்டும்?

கல்கி

ஒரு சாடிஸ்ட் கணவனால் பாதிக்கப் படும் இரு மனைவிகள். அவனைத் திருத்த நினைக்கிறாள் பெண்ணிய புதுமைப் பெண் கல்கி.அவளை ஒருவன் காதலித்துக் கொண்டு இருக்கிறான். ஆனாலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவனை பழைவாங்க வேண்டுமே? அவனுக்கு மூன்றாவது மனைவியாகி, கர்ப்பமாக இருக்கும் போது பல டார்ச்சர் செய்து அவனைப் பழிவாங்குகிறாள். எந்த லாஜிக்காலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. பெண்ணியம் என்றால் என்னவென்று ஒரு பெண்ணுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை.அரைகுறையாய் தெரிந்து வைத்திருப்பதுதான் அதிக ஆபத்து. என்ற கருத்தை மட்டும் நான் இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

பார்த்தாலே பரவசம்

தன் கணவனுக்கு (மாதவன்) இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்து குழந்தை இருக்கிறது என்று தெரிய வந்தவுடன் பிரிகிறாள் மனைவி (சிம்ரன்). ஒரு நடனக் கலைஞனை சந்திக்கிறாள் (ராகவா லாரன்ஸ்)தன் கணவன் மற்றொரு பெண்ணை (சினேகா) திருமணம் செய்யப் போகிறான் என கேள்விப்பட்டு லாரன்ஸை திருமணம் செய்ய நினைக்கிறாள். ஆனால் பல திருப்பங்கள் ஏற்பட்டு சிம்ரன்,மாதவனுடனே இணைகிறாள்.

இந்தப் படத்தை பார்த்து யாரும் டென்சன் ஆகாமல் இருந்தால் அவருக்கு மிஸ்டர் கூல் பட்டத்தைக் கொடுக்கலாம். மாதவனுடன் உறவு கொண்ட பெண் (ராதிகா சௌத்ரி) எதற்கு மெனக்கெட்டு தன் மகனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அதை சொல்லுகிறாள்? பல வருடம் கழித்து? சரி கணவனைப் பழிவாங்க இன்னொரு திருமணம் தான் மாற்றா?.

இதெல்லாம் பரவாயில்லை. லாரன்ஸின் குடும்பத்தை கறுப்பு குடும்பம் என்று சித்தரித்திருப்பார்கள்.எல்லோருக்கும் கறுப்பு மை தடவி. வடிவுக்கரசிக்கு கறுப்பு மை தடவி, அவர் குடிப்பது போல் காட்டி,மற்ற ஜாதியினர் இப்படித்தான் என்பது போல் பாலசந்தர் தன் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருப்பார். யாருமே இந்த வக்கிரத்தை கண்டிக்கவில்லை.


47 நாட்கள், ஒரு வீடு இரு வாசல் ஆகியவை ஓகே.
அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் மூன்றுமே குடும்பத்தில் உள்ள தம்பி,தங்கைகளுக்காக அக்கா பாடுபடுவது. மூன்றிலுமே அவர்கள் தங்கள் வாழ்க்கையை,காதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாத்திரங்கள். (அரங்கேற்றத்தில் பாலியல் தொழிலாளி). இந்தப் படங்களையும் அவர்கள், நிழல் நிஜமாகிறது போன்றவற்றைப் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.